சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் கோவில்பட்டியில் நிற்கும் என அறிவிப்பு!
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையேயான சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை வாரத்திற்கு 4 நாட்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் கோவில்பட்டியில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை - கோவை, சென்னை - நெல்லை, சென்னை - மைசூர், கோவை - பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கடந்த சில மாதங்களாக சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாராந்திர ரயிலாக சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இம்மாதத்தில் வாரத்திற்கு 4 சிறப்பு வந்தே பாரத் ரயில் என ஜூலை 21 ஆம் தேதி வரை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க வந்தே சென்னை நாகர்கோவில் பாரத் சிறப்பு ரயில் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வரும் ஜூலை 11,12,13, 14, 18,19, 20, 21 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில், மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக அதே தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வந்தே பாரத் ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம், விழுப்புரம் திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, ஆகிய வழித்தடங்களில் நின்று நாகர்கோவில் சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் தென் மாவட்ட பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் நிலையில், இதனை நிரந்தர சேவையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.