பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’வுக்கு பதில் ‘பாரத்’ - திருத்தம் செய்ய NCERT பரிந்துரை!
சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என்ற சொல்லை மாற்ற NCERT என அழைக்கப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி ) சார்பில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில், சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களில் ‘இந்தியா’ என்ற பெயரை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ‘பாரத்’ என்று மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், பாடப் புத்தகங்களில் ‘இந்து வெற்றி’ குறித்த விஷயங்களை முன்னிலைப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டதாக உயர்மட்ட குழுவின் தலைவர் சி.ஐ.ஐசக் தெரிவித்தார். பண்டைய வரலாறு என்பதற்கு பதில் கிளாசிக்கல் வரலாற்றை அறிமுகப்படுத்தவும், அனைத்து பாடங்களிலும் இந்திய அறிவு முறையை (IKS) அறிமுகப்படுத்தவும் குழுவினர் பரிந்துரைத்ததாகவும் அவர் கூறினார்.
ஏற்கனவே ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதில் ‘பாரத்’ என பயன்படுத்தப்பட்டது நாடு முழுவதும் பேசுபொருளானது. தொடர்ந்து ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியின் மேஜையில் இந்தியா என்பதற்கு பதில் ‘பாரத்’ என பெயர் பலகை வைத்ததற்கும் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் பள்ளி பாடப்புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.