சிறந்த இயக்குநர் சுதா கொங்கரா.. சிறந்த இசையமைப்பாளர் ஜிப்ரான்.. தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது சுதா கொங்கராவிற்கும். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிப்ரானுக்கும் வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை (மார்ச் 6) மாலை 6 மணிக்கு சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெறவுள்ளது.
சிறந்த இயக்குநருக்கான விருது ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்திற்காக சுதா கொங்கராவிற்கும், சிறந்த உரையாடலாசிரியர் விருது ‘கத்துக்குட்டி’ திரைப்படத்திற்காக இரா.சரவணனுக்கும் வழங்கப்படவுள்ளது.
சிறந்த இசையமைப்பாளர் விருது ‘உத்தம வில்லன்’ மற்றும் ‘பாபநாசம்’ திரைப்படத்திற்காக ஜிப்ரானுக்கும், சிறந்தப் பாடலாசிரியர் விருது ‘36 வயதினிலே’ திரைப்படத்திற்காக விவேக்கிற்கும், சிறந்த பின்னணிப் பாடகர் விருது ‘வை ராஜா வை’ திரைப்படத்திற்காக கானா பாலாவிற்கும், சிறந்த பின்னணிப் பாடகி விருது ‘36 வயதினிலே’ திரைப்படத்திற்காக கல்பனா ராகவேந்தர்க்கும், சிறந்த பின்னணிக்குரல் (ஆண்) விருது ‘36 வயதினிலே’ திரைப்படத்திற்காக கௌதம் குமார்க்கும், சிறந்த பின்னணிக்குரல் (பெண்) விருது ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்திற்காக ஆர்.உமா மகேஸ்வரிக்கும் வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் (2014 - 2015) சிறந்த இயக்குநருக்கான விருது ‘புர்ரா' திரைப்படத்திற்காக கே.மோகன் குமார்க்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது ‘கண்ணா மூச்சாலே’ திரைப்படத்திற்காக விக்னேஷ் ராஜகோபாலனுக்கும், சிறந்த ஒலிப்பதிவாளர் விருது ‘கண்ணா மூச்சாலே’ திரைப்படத்திற்காக வி.சதிஷ்க்கும், சிறந்த படத்தொகுப்பாளர் விருது ‘பறை’ திரைப்படத்திற்காக ஏ.முரளிக்கும், சிறந்த படம் பதனிடுவர் விருது ‘கிளிக்’ திரைப்படத்திற்காக வி.சந்தோஷ்குமார்க்கும் வழங்கப்படவுள்ளது.
விருது வழங்கும் விழாவில், மொத்தம் 39 விருதாளர்களுக்குக் காசோலையும், விருதாளர்களின் பெயர் பொறித்த தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.