4 வயது மகனை கொன்ற பெங்களூரு பெண் CEO-க்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல்!
4 வயது மகனை கொலை செய்த பெங்களூருவை சேர்ந்த பெண் CEOவின் போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து, மேலும் 5 நாட்கள் நீட்டித்து கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரில் Minfful Al Lab எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய சுச்சனா சேத் (39) கோவாவில் தனது 4 வயது மகனை கொலை செய்து தப்ப முயன்றபோது, அவர் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களின் தகவலின் பெயரில் கோவா போலீசார் அவரை கைது செய்தனர். .
இதையடுத்து, சுசனா சேத்தை கா்நாடக மாநிலம் சித்ரதுா்கா காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து கோவாவுக்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நேற்று (ஜன. 14) வரை காவலில் எடுத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விவாகரத்து வழக்கின் தீர்ப்பில், மகனை சந்திக்க ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தந்தைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த சுசனா, மகனை தந்தை சந்திக்கக் கூடாது என்பதற்காக இந்தக் கொலையை செய்ததாக விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது, “சுசனா சேத்தை விசாரிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்பதால், காவலை நீட்டிக்குமாறு நாங்கள் கேட்டிருந்தோம். சேத்தின் கணவர் வெங்கட் ராமனின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் பணி முடிந்து விட்டது. டிஎன்ஏ மாதிரியை பரிசோதனை செய்யவேண்டும்" என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து மேலும் 5 நாட்கள் போலீஸ் காவலை நீட்டித்து கோவா நீதிமன்றம் உத்தரவிட்டது.