பச்சை நிற ஜெர்சியில் களமிறங்கும் பெங்களூரு அணி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளனர்.
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் குறிப்பிட்ட 5 அணிகளுடன் 2 முறையும், 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு ஒரு அணி குறைந்தது 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். அந்த வகையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடிய பெங்களூரு அணி ஒன்றில் வெற்றி பெற்றிருக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், உலக வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று நடைபெறவுள்ள போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளனர்.