“உறுதியாக இருங்கள் ஜப்பான்” - நிலநடுக்கம் குறித்து ஜூனியர் என்டிஆர் உருக்கம்!
பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது அங்கு இருந்ததாகவும், பாதிப்பின் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை எனவும் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தேவாரா’. இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவசுதா ஆர்ட்ஸ்ட் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் முதல் பாகம் ஏப்ரல் 5, 2024 வெளியாக உள்ளது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், புத்தாண்டை கொண்டாட குடும்பத்துடன் ஜப்பான் சென்றிருந்தார். திங்கட்கிழமையன்று கிழக்காசிய நாடான ஜப்பானில், ஹோன்சு தீவின் மேற்கு கடலோர பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு கடலோரத்தில் உள்ள நோடோ, இஷிகவா மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து, 90 நிமிடங்களில், 21 முறை நிலநடுக்கம் ஏற்பட்டன. ஆனால் திங்கள் கிழமையன்று இரவு நிலநடுக்கத்திற்கு முன்பாகவே ஜூனியர் என்.டி.ஆர் இந்தியா திரும்பினார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
"கடந்த வாரம் முழுவதும் ஜாப்பானில்தான் தங்கியிருந்தேன். இன்றுதான் அங்கிருந்து வீடு திரும்பினேன். இருப்பினும், அங்கு ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பின் அதிர்ச்சியில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் என் இதயம் வருந்துகிறது. எல்லாம் விரைவில் சரியாகும் என்று நம்புகிறேன். உறுதியாக இருங்கள் ஜப்பான்” என பதிவிட்டுள்ளார்.