தென்காசி குற்றால அருவிகளில் குளிக்கத் தடை!
தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.
இது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வலுவடையக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27ம் தேதி உருவாகக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, தென்காசி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் இன்று (மே 24) மஞ்கள் எச்சரிக்கையும், நாளை (மே 25) மற்றும் நாளை மறுநாள் (மே 26) ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றால அருவிகளில் குளிக்க போலீசார் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர். விடுமுறை தினம் என்பதால் அருவிகளில் ஆவலுடன் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். வெள்ளப்பெருக்கு இல்லாதபோதிலும், மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாதுகாப்புக் கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.