சிலந்தி ஆற்றில் தடுப்பணை | கேரளா அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதியான
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வரும் கேரளா அரசை கண்டித்து தமிழக
விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கேரளா எல்லை பகுதியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாற்றின்
குறுக்கே தடுப்பணை கட்டிய நிலையில் தற்போது சிலந்தி ஆற்றைத் தடுத்து தடுப்பணை
கட்டி வருகின்றது கேரளா அரசு. இதனால் அமராவதி அணையின் நீர் வரத்து
கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமராவதி அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் இரண்டு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நெல் பயிரிடும் விவசாய நிலங்கள் மற்றும் தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர் நிலங்களும் பயன் பெற்று வருகிறது.
கேரளா அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் நெல் சாகுபடிக்கே தண்ணீர் கிடைக்காது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உரிய அனுமதி பெறாமல் சிலந்தியாற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளையும் கேரளா அரசு மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்டது.
இதேபோல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமராவதி பாசன விவசாயிகளின் அச்சத்தை போக்கும் வகையில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்த கேரளா அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக - கேரளா எல்லை பகுதியான உடுமலைப்பேட்டை சின்னாறு சோதனைச் சாவடியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.