"வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை" - தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு!
வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 மக்களவை தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இதையும் படியுங்கள் : மக்களவைத் தேர்தலை ஒட்டி, சிறப்பு Doodle வெளியிட்ட Google நிறுவனம்...!
இந்நிலையில், வாக்குச்சாவடி அமைவிடங்களுக்கு வெளியே வாக்காளர்கள் தற்படம் (செல்ஃபி) எடுத்துக்கொள்ள வசதியாக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :
"மாநிலத்தில் மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில், முதல் தலைமுறை வாக்காளர்கள் அதாவது 18 முதல் 19 வயதுக்கு உள்பட்டவர்கள் 10,92,420 பேர் உள்ளனர். 20 முதல் 29 வயதுக்கு உள்பட்டவர்கள் 1.10 கோடி பேரும் , 30 முதல் 39 வயதுக்கு உள்பட்டவர்கள் 1.29 கோடி பேரும், 40 முதல் 49 வயதுக்கு உள்பட்டவர்கள் 1.37 கோடி பேரும், 50 முதல் 59 வயதுக்கு உள்பட்டவர்கள் 1.10 கோடி பேரும், 60 முதல் 69 வயதுக்கு உள்பட்டவர்கள் 71.64 லட்சம் பேரும் உள்ளனர்.
தமிழ்நாட்டில் இளம் வயது வாக்காளர்கள் அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் வாக்களிக்கும்போது வாக்குச்சாவடி வளாகங்களில் கைப்பேசி மூலம் தற்படங்களை எடுக்கும் நிலை அதிகரித்து வருகிறது. ஆனால், வாக்குச்சாவடிகள், அதன் வளாகங்களில் கைப்பேசிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்குச்சாவடிகளுக்குள் கைப்பேசிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்களித்த பிறகு, இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும். இதைக் காண்பித்து தற்படம் எடுக்க விரும்புவோருக்காக வாக்குச்சாவடி வளாகங்களுக்கு வெளியே 'செல்ஃபி பாயிண்ட்' என தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான வசதிகளை மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் செய்துள்ளனர்"
இவ்வாறு தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.