எல்லையில் குவியும் வங்கதேச மக்கள்.. தொடரும் பதற்றம்!
இந்திய எல்லையை நோக்கி வரும் வங்கதேச மக்களை இந்திய பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் நாளடைவில் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நிலைமை மோசமானதை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதனையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து, வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் நேற்று (ஆக. 8) இரவு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதனிடையே நேற்று இந்திய - வங்கதேச எல்லையை கண்காணிக்க மத்திய அரசு குழு ஒன்றையும் உருவாக்கியது. மேலும் சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் வங்கதேசத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் அண்டை நாடான இந்தியாவில் தஞ்சம் கோரி வங்கதேச - இந்திய எல்லையில் முகாமிட்டு வருகின்றனர். பலரும் இந்திய - வங்கதேச எல்லையை நோக்கி விரைந்த நிலையில் ஜீரோ பாயிண்ட்டில் எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். “பங்களாதேஷ் மக்கள் எல்லையில் கூடியிருந்தனர், ஆனால் எல்லை முழுவதுமாக சீல் வைக்கப்பட்டதால் யாரும் நாட்டிற்குள் நுழைய முடியவில்லை. அவர்கள் பின்னர் வங்கதேச எல்லை காவலர்களால் அவர்களின் சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், ”என மூத்த BSF அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகளை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய எல்லையான மேற்குவங்க மாநிலம் கூச் பெஹார் அடுத்த சிடல்குச்சியில் உள்ள பதன்துளி பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. அதில், நூற்றுக்கும் மேற்பட்டோ வங்கதேச எல்லை பகுதியில் குவிந்திருக்கின்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் கட்டுக்குள் வைத்துள்ளனர்.