டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியது #Bangladesh!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 171 ரன்களும், சாத் ஷகீல் 141 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 167.3 ஓவர்களில் 565 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா 3 விக்கெட்டும், ஷகீன் ஷா அப்ரிடி, குர்ரம் ஷஜாத், முகமது அலி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். 117 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷபிக் 12 ரன்களுடனும், கேப்டன் ஷான் மசூத் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். முகமது ரிஸ்வான் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். முடிவில் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 146 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரிஸ்வான் 51 ரன்கள் அடித்தார். வங்காளதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன் மூலம் வங்காளதேச அணி வெற்றி பெற வெறும் 30 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்காளதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்காளதேச அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும்.