"பெங்களூரு அணி கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்பு" - விஜய் மல்லையா
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக அந்த அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17-வது சீசன், அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், 70 லீக் போட்டிகளின் முடிவில் 6 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இந்நிலையில், நேற்று (மே 21) முதல் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற்றது.
இதில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. ஆட்டத்தின் இறுதியில், 13.2 ஓவர்களில் இலக்கை கடந்து, 164 ரன்களை விளாசி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் முதல் அணியாக நுழைந்தது.
இதையடுத்து, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளிபட்டியலில் 3-வது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 4-வது இடம் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதயுள்ளன. இதில் தோல்வி அடையும் அணி தொடரை விட்டு வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஹைதராபாத் அணியுடன் மோதும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக முன்னேறும்.
இந்த நிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக அந்த அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருப்பதாவது,
“நான் பெங்களூரு அணியின் உரிமத்தையும், விராட் கோலியை ஏலத்தில் எடுத்த போதும் இதைவிட சிறந்த தேர்வுகளை செய்திருக்க முடியாது என்று எண்ணினேன். இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல பெங்களூரு அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக என் உள்ளுணர்வு கூறுகிறது. முன்னேறிச் செல்லுங்கள், வாழ்த்துகள்.” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது ஆர்சிபி அணியை மல்லையா வாங்கினார். இதனிடையே, கடந்த 2016-ஆம் ஆண்டு வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாமல் நாட்டைவிட்டு மல்லையா தப்பிச் சென்ற பிறகு அணியின் உரிமையாளர் மாறியது குறிப்பிடத்தக்கது.
https://x.com/TheVijayMallya/status/1793023778965922195