புதுச்சேரியில் மீண்டும் துவங்கிய விமான சேவை!
புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து 8 மாதங்களுக்கு பிறகு இன்று விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமானங்களை இயக்கி வந்தது. அதிக கட்டணம் காரணமாக
பொது மக்களிடம் போதிய வரவேற்பு கிடைக்காததால், கடந்த மார்ச் மாதம் இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவையை தொடங்க, அம்மாநில
அரசு பல்வேறு விமான நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதன் பலனாக புதுச்சேரியில் இருந்து பெங்களூர், ஹைதராபாத் நகரங்களுக்கு விமானங்களை இயக்க இண்டிகோ நிறுவனம் முன்வந்தது. 72 பேர் பயணிக்க கூடிய (ATR-72) சிறிய ரக விமான சேவை டிச.20 தேதி முதல் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை 11.10 மணிக்கு பெங்களூரில் இருந்து 78 இருக்கைகள் கொண்ட இண்டிகோ சிறிய ரக விமானம் 74 பயணிகளுடன் புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்தடைந்தது. விமானம் தரையிறங்கிய போது, தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், விமானத்தில் வந்த பயணிகளுக்கு பூ மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மதியம் 12.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து 63 பயணிகளுடன் ஹைதராபாத்துக்கு விமானம் புறப்பட்டது. இந்த விமான சேவையை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மறு மார்க்கமாக அதே விமானம் பிற்பகல் 3.05 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 4.50 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். பின்னர் 5.10 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு, மாலை 6.35 மணிக்கு பெங்களூர் சென்றடைய உள்ளது.
இதற்கான விமான கட்டணம் குறைந்தபட்சம் 3500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 8 மாதங்களாக புதுச்சேரி விமான நிலையம் செயல்படாமல் இருந்த நிலையில், இன்று விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.