மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல தடை!
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை
உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையானது தற்போது தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தேயிலைத் தோட்ட கிராமங்களான மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.
ஜூன் மாதத்திலிலிருந்து தற்போது வரை மட்டும் நாலு மூக்கு பகுதியில் 58 செமீ மழையும், ஊத்து பகுதியில் 50 செமீ, காக்காச்சி பகுதியில் 37.5 செமீ, மாஞ்சோலை பகுதியில் 18.7 செமீ மழையும் பதிவாகி உள்ளது. அப்பகுதிகளில் இயல்பாக பெய்யும் மழையைவிட தற்போது அதிகமாக மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக இந்த மலை கிராமங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.