சிங்கப்பூர், ஹாங்காங்கில் MDH, Everest மசாலாக்களுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் - தூதரக அதிகாரிகள் விளக்கம் அளிக்க மத்திய அரசு நோட்டீஸ்!
சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் MDH, Everest மசாலாக்களுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில், அங்குள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு மத்திய வர்த்தக அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய இந்திய நிறுவனங்கள் சிக்கன், மட்டன், மீன், சாம்பார் உட்பட பல்வேறு உணவுகளை தயாரிக்க மசாலா பொடிகளை விற்பனை செய்து வருகின்றன. உள்நாடு மட்டுமன்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் அந்த மசாலா பொடிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், எவரெஸ்ட் நிறுவனத்தின் மீன் மசாலாவில் அளவுக்கு அதிகமாக ‘எத்திலீன் ஆக்சைடு’ கலந்திருப்பதாகவும், அதனால் அந்த மசாலா பொருட்களுக்கு தடை விதிப்பதாகவும் கடந்த வாரம் சிங்கப்பூர் அரசு அறிவித்தது.
மேலும், இந்த மசாலாக்களை விற்க வேண்டாம் என்று தங்கள் விற்பனை நிலையங்களுக்கு ஹாங்காங் அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களில் மசாலா பொருட்களில் கலந்துள்ள ரசாயனம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்படும். புற்றுநோய், மார்பக புற்றுநோய் உட்பட பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று ஹாங்காங் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் இந்திய மசாலாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து அங்குள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு மத்திய வர்த்தக அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.