Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜாமின் நிபந்தனைகள் எளிதாக இருக்க வேண்டும் - விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை!

ஜாமின் வழங்கும் போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்குமாறு விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
03:53 PM Jan 29, 2025 IST | Web Editor
Advertisement

குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஜாமின் கிடைத்தும் பிணை செலுத்த முடியாமல் 800க்கும் மேற்பட்டவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக, டிடி நெக்ஸ்ட் ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், ஜாமின் வழங்கப்பட்ட பின்னரும் நிபந்தனைகளை நிறைவேற்றாததால் தமிழகம் முழுவதும் 104 பேர் சிறையிலேயே இருப்பதாகக் கூறி அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், அதிகபட்சமாக கோவை மத்திய சிறையில் 27 பேர் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் கடந்த முறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக 32 பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும், எஞ்சியுள்ளவர்களையும் ஜாமினில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதேபோல, புதுச்சேரியில் 14 பேர் சிறையில் உள்ளதாக அம்மாநில அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து, நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் தற்போது சிறையில் உள்ளவர்களை அவர்களுக்கான நிபந்தனைகளை தளர்த்தி விடுவிக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து ஜாமின் வழங்குவதில் எந்த பயனும் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்குமாறு விசாரணை நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தி விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags :
bail conditionsmadras highcourtTrial courts
Advertisement
Next Article