பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் ஆஸம் மீண்டும் நியமனம்!
டி20 உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு பாகிஸ்தான் அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அணியின் புதிய கேப்டனாக வேகப் பந்துவீச்சாளர் ஷகீன் ஷா அஃப்ரிடி நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்நிலையில் மீண்டும் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த சில மாதங்களாகவே தங்கள் அணிக்கான தலைமைப் பயிற்சியாளருக்கான தேடலில் ஈடுபட்டு வந்தது. இந்தத் தேடலில் வெளிநாட்டு பயிற்சியாளர்களான ஆடம் வோஜஸ், லூக் ராஞ்சி, ஷேன் வாட்சன் மற்றும் மைக் ஹெசன் ஆகியோரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அணுகியதும், பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க அவர்கள் மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.