"ஒளியிலே தெரிவது தேவதையா?" அழகி திரைப்படம் ரீரிலீஸ் எப்போது தெரியுமா?
அழகி திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீசாகவுள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு பதிவு ஒன்றை சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பொதுவாக சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் என்னென்ன மொழிகளில் என்னென்ன புதுப்படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பே சில மாதங்கள் முன்பு வரை இருந்தது.
ஆனால் தற்போது பெரிய அளவில் படங்கள் எதுவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில் பழைய படங்கள் எல்லாம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகின்றன. 3, மயக்கம் என்ன, மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, திருமலை, கோ, அண்ணாமலை, வாலி, விருமாண்டி உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலில் சக்கைப்போடு போட்டன.
இந்நிலையில் அழகி திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது. 2002-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளியான படம் ‘அழகி’. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, மோனிகா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் சிறந்த திரைப்படத்துக்கான பிலிம் ஃபேர் விருதை வென்றது.
இப்படத்தில் இடம்பெற்ற ‘பாட்டுச் சொல்லி’ என்ற பாடலுக்காக சாதனா சார்கம் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை வென்றார். இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைந்தது.
இந்த படத்தில் மறைந்த பாடகி பவதாரிணி பாடிய ஒளியிலே தெரிவது தேவதையா பாடல் மிகவும் வைரலான பாடலாகும். பழைய தமிழ்ப் படங்கள் ரீரிலிஸாகுவது வழக்கமாக இருந்து வருகிறது. 22 வருடங்களுக்குப் பிறகு திரைக்கு வருவதை இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் மகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படம் வரும் மார்ச் 29ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட தரத்துடன் வெளியாகிறது. இயக்குநர் வெங்கட் பிரபுவும் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தப் படத்தின் மறுவெளீயீட்டு போஸ்டரைப் பகிர்ந்துள்ளார்.