#AyushmanBharat | ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லா மருத்துவம்… 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான இலவச மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
70 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வசதி வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கான இலவச மருத்துவக் காப்பீடு 'திட்டமாக ஆயுஷ்மான் பாரத்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வசதி வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் திட்டம் மூலம் மூத்த குடிமக்கள் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
ஆதாா் அட்டையில் இடம்பெற்றுள்ள பிறந்த தேதியின் அடிப்படையில் 70 வயது அல்லது அதற்கு மேல் உள்ள அனைவரும் ஆயுஷ்மான் கார்டுக்கு தகுதியுடையவர்கள். அவர்கள் ஏழை, நடுத்தர வர்க்கம் அல்லது பணக்காரர் என்ற பாகுபாடுகள் இருக்காது.
மத்திய அரசின் மருத்துவத் திட்ட (சிஜிஹெச்எஸ்) அட்டை, முன்னாள் ராணுவத்தினா் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (இசிஹெச்எஸ்), ஆயுஷ்மான் மத்திய ஆயுதப்படை திட்டம் ஆகியவற்றின் கீழ் மூத்த குடிமக்கள் தங்களின் மருத்துவக் காப்பீட்டைப் பெற்றிருந்தால் அவா்கள் அதே திட்டத்தில் தொடரலாம் அல்லது இத்திட்டத்துக்கு (பிஎம் - ஜேஏஒய்) மாறிக் கொள்ளலாம். தனியாா் மருத்துவக் காப்பீடு அல்லது மாநில காப்பீட்டுத் திட்டம் (இஎஸ்ஐ)ஆகியவற்றில் பதிவு செய்திருந்தாலும் அவா்களும் ஏபி பிஎம் - ஜேஏஒய் திட்டப் பலனை பெற தகுதி பெறுவா்.
பட்டியலிடப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், மருத்துவ நிலையங்கள் ஆகியவற்றில் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயனாளி சிகிச்சை பெற முடியும். பட்டியலில் இல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் அதற்கான தொகையை காப்பீடு திட்டம் மூலம் திரும்பப் பெற இயலாது. மருத்துவமனையில் சேருவதற்கு முந்தைய 3 நாள் சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் சோ்ந்த நாளில் இருந்து 15 நாள்களுக்கான மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான செலவினம் காப்பீடு வசதி மூலம் ஈடுசெய்யப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்க, PMJAY இணையதளம் அல்லது ஆயுஷ்மான் செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு பதிவு செய்யலாம். அதேபோல், அருகிலுள்ள CSC மூலம் விண்ணப்பிக்கலாம், www.beneficiary.nha.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யலாம் மற்றும் பிஎம் - ஜேஏஒய் மையங்களிலும் பதிவு செய்யும் வசதி இருக்கும். ஆயுஷ்மான் கார்டு வைத்திருப்பவர்கள் புதிய கார்டுக்கு மீண்டும் விண்ணப்பித்து EKYC ஐ முடிக்க வேண்டும்