#AyudhaPooja எதிரொலி - பூக்களின் விலை உயர்வு!
நாளை ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுக்கோட்டை மலர் சந்தையில் பூக்கிளன் விலை அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மலர்சந்தை பிரபலமானது. இங்கு புதுக்கோட்டை நகரை சுற்றியுள்ள ஆலங்குடி, கந்தர்வகோட்டை உள்ளிட்ட கிராம விவசாயிகள் தினந்தோறும் பூக்கள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு ஆயுத பூஜையை முன்னிட்டு, பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
பொதுவாகவே விஷேச தினங்களில் பூக்களின் விலை உயரும். அந்த வகையில் நாளை ஆயுத பூஜையும், 12ம் தேதி விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதனால் பூக்களின் விலை தற்போது அதிகரித்துள்ளது. அதன்படி மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1500 ரூபாய்க்கும், முல்லை 900 ரூபாய்க்கும், ஜாதிமல்லி 900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கனகாம்பரம் ஒரு கிலோ 1000 ரூபாய்க்கும், அரளிப்பூ 650 ரூபாய்க்கும், சம்பங்கி 400 ரூபாய்க்கும், ரோஜா, பட்டர் ரோஜா 250 ரூபாய்க்கும், செவ்வந்தி பூ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சாமந்திப்பூ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.