“அயோத்தி கோயிலில் குழந்தை ராமர் சிலை இறுதி செய்யப்படவில்லை!” - கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
அயோத்தி ராமர் கோயிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் சிலை இதுவரை இறுதி செய்யபடவில்லை' என, கோயிலின் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத வழிபாட்டுத்தலமான ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது, அயோத்தி ரயில் நிலையமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலின் குடமுழுக்கு விழா, வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே, கோயிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்ய, மூன்று சிலைகள் தயார் செய்யப்பட்டன. அதில், 5 வயதுடைய குழந்தை வடிவிலான ஒரு சிலையை, அறக்கட்டளை நிர்வாகிகள், ஓட்டெடுப்பு வாயிலாக இரண்டு நாட்களுக்கு முன் தேர்வு செய்ததாக தகவல் வெளியானது.
இதையும் படியுங்கள்: பால் மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
இதனை உறுதிப்படுத்தும் வகையில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்த சிற்ப கலைஞர் அருண் யோகிராஜ் வடிவமைத்த குழந்தை ராமர் சிலை தேர்வாகி இருப்பதாக தன் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், அக்கோயிலின் அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவரான பிரகாஷ் குப்தா கூறுகையில், "இதுவரை கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் சிலையை இறுதி செய்யவில்லை. அறக்கட்டளை நிர்வாகம் சார்பில் எடுக்கப்படும் முடிவை, விரைவில் வெளிப்படையாக தெரிவிப்போம்," என்று தெரிவித்துள்ளார்.