நாமக்கல் : அயோத்தி ராமர் கோயிலுக்கான மணிகள் தயாரிப்பு - 12 ஆலய மணிகள், 36 பிடி மணிகள் அனுப்பி வைப்பு!
அயோத்தி ராமர் கோயில் பிரகாரத்தில் பொருத்துவதற்காக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 1,200 கிலோவில் ஆலயமணிகள் வடிவமைக்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள அயோத்தியில், கோசல நாட்டின் அரசன் தசரதனின் மூத்த மகனாக ராமர் பிறந்தார் என ராமாயணத்தில் விளக்கப்பட்டுள்ளது. அதனால், இப்பகுதி ‘ராம ஜென்ம பூமி’ என அழைக்கப்படுகிறது.
சரயு ஆற்றின் கரையில் உள்ள 7 இந்து புனித நகரங்களில், ராம ஜென்ம பூமியும் ஒன்று.
இங்கு குழந்தை ராமர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 2024, ஜனவரி 22 ஆம் தேதி இந்த கோயில் குடமுழுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
கோயில் குடமுழுக்கு விழாவிற்காக, ஆலயமணி வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்காக, கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பக்தர் ஒருவர், நாமக்கல்
முல்லை நகரில் உள்ள ‘ஆண்டாள் மோல்டிங் ஒர்க்ஸ்’ நிறுவனத்தை அணுகினார். இங்கு
தொடர்ந்து, ஆலயமணி வடிவமைக்கப்பட்டு, பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து, ஸ்தபதி காளிதாஸ் கூறுகையில், "அயோத்தி ராமர் கோயில்
குடமுழுக்கை முன்னிட்டு, கோயில் பிரகாரத்தில், 108 ஆலய மணிகள் அமைக்க
முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக, 12 ஆலய மணிகள் மற்றும் 36 பிடி மணிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த ஆலயமணிகள், காப்பர், வெள்ளியம், துத்தநாதம் ஆகிய மூன்று உலோகங்களை
பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.
இரவும், பகலும் என, ஒரு மாதத்தில் இந்த ஆலய மணிகள் வடிவமைக்கப்பட்டன.இவை அனைத்தும், 1,200 கிலோ எடை கொண்டுள்ளது. இப்பணியில், 20 பணியாளர்கள் ஈடுபட்டனர்.இந்த ஆலயமணிகள், கர்நாடகா மாநிலம், பெங்களூருவுக்கு எடுத்து செல்லப்பட்டு பக்தர்கள் பார்வைக்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயிலுக்காக ஆலயமணி தயாரிக்கும் பணி எங்களுக்கு கிடைத்துள்ள
பெரும் பாக்கியமாக கருதுகிறோம்" என்று தெரிவித்தார்.