அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா - ஏராளமான பக்தர்கள் காவிரி தீர்த்தம் எடுத்து திருவீதி உலா!
அவிநாசி கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, இன்று பக்தர்கள் காவிரி தீர்த்தம் எடுத்து திருவீதி உலா வந்தனர்.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் நாயனார் தேவார பதிகம் பாடி உயிருடன் மீண்டும் உயிர்ப்பித்து எழச் செய்த திருத்தலமாகவும் பிரசித்தி பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் விளங்குகிறது. இந்த கோயில் குடமுழுக்கு விழா கடந்த 24 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தினமும் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படியுங்கள் ; நாளை முதல் அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம் - அமைச்சர் சிவசங்கர்!
இதனைத்தொடர்ந்து, இன்று (ஜன.29) காலை புதுப்பாளையம், ராயம்பாளையம் சன்னை மிராஸ்தாரர்கள், தை பூச பழனி யாத்திரை குழுவினர், பல்வேறு பகுதி பொதுமக்கள் எடுத்து வந்த காவிரி தீர்த்தக் குடம் திருவீதி உலா நடைபெற்றது. மேலும், அவிநாசி வீர ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து குதிரை, காளை உள்ளிட்டவைகளுடனும் வானவேடிக்கை, கைலாய வாத்தியம் முழங்கவும் புறப்பட்ட தீர்த்தக்குட ஊர்வலம் மேற்கு, வடக்கு, கிழக்கு ரத வீதிகளின் வழியாக வந்து அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள், பெரியவர்கள், சிவனடியார்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை மாலை முதல் கால யாக பூஜை தொடங்க உள்ளது. தொடர்ந்து,பிப்ரவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை எட்டு கால யாக பூஜை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வாக பிப்ரவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் மகா குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
இதற்காக 79 யாகசாலைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் 100 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு குடமுழுக்கு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் மாலை 6 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு சுவாமி திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெற உள்ளது.