Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ?

11:58 AM Apr 04, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் 3 பெட்டிகளை கொண்ட தானியங்கி மெட்ரோ ரயில்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக மெட்ரோ நிர்வாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்,  மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தற்போது,  முதல் கட்டத் திட்டப் பணிகள் முடிவடைந்து விமானநிலையம்-விம்கோ நகர்,  பரங்கிமலை-சென்னை சென்ட்ரல் என இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில்,  வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் 3 பெட்டிகளை கொண்ட முதல் ஓட்டுநர் இல்லா தானியங்கி மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகவும்,  அடுத்த 2 மாதத்தில் 6 ரயில்கள் தயாரிக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்குள் தானியங்கி மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கு தண்டவாளங்களில் தொழில்நுட்பரீதியிலான பணிகளை முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஓட்டுநர் இல்லா தானியங்கி ரயில் குறித்து கடந்த மாதம் மெட்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறப்பபட்டிருந்ததாவது;

‘சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் ஒட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1215.92 கோடி மதிப்பில் (வரிகள் உட்பட) வழங்கப்பட்டுள்ளது.

3 பெட்டிகளை கொண்ட அந்த ரயிலில் 1,000 பயணிகள் வரை பயணிக்க முடியும்.  மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மெட்ரோ ரயிலிலும் 16 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்படும்.  முதல்கட்டத்தில் ரயில் இயக்குவது, நிறுத்துவது, ரயில் கதவை திறப்பது, மூடுவது எல்லாம் ஓட்டுநரால் மேற்கொள்ளப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் நவீன தொழில்நுட்பம் மூலம் ரயில் இயக்கம் கட்டுப்படுத்தப்படும். ஏதாவது அவசர காலத்தில் உதவி தேவை என்றால், இயக்க கட்டுப்பாட்டு மைய ஊழியர் ரயில் செயல்பாட்டை கட்டுப்படுத்துவார்.

அடுத்த நிலையத்தை அடைந்த பிறகு, கட்டுப்பாட்டாளர் வசம் ஒப்படைக்கப்படும்.
2025-ஆம் ஆண்டில், இரண்டாம் கட்டத் திட்டத்தின் முதல் பகுதி பணிகள் நிறைவடையும்போது சுமார் 138 ரயில்கள் ஓடும் என்றும், அப்போது 19.2 லட்சம் மக்கள் தினசரி பயணம் மேற்கொள்வார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளது.

Tags :
Automatic MetroChennaiChennai Metro railDriverless MetroMetro
Advertisement
Next Article