ஆஸ்திரேலியா : சிறுவர்களின் சமூக வலைதள கணக்குகளை நீக்க உத்தரவு!
உலகம் முழுவதும் தற்போது சிறுவர், சிறுமிகள் ஆண்ட்ராய்டு, ஐபோன்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். மேலும் பல சிறுவர், சிறுமிகள் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமிகள் அதிகளவில் வலைதளங்களை பயன்படுத்துவதால் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா அரசாங்கம் 16 வயதுக்குட்பட்ட சிறுவர் - சிறுமிகளின் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இது டிசம்பர் 10ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதனை மீறி சமூக வலைதளங்களில் சிறுவர்- சிறுமிகள் கணக்கு வைத்திருந்தால் அதனை நீக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசாங்கம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
டிக்-டாக், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் உள்பட பல்வேறு சமூக வலைதள நிறுவனங்கள் சிறுவர், சிறுமிகளின் கணக்குகளை நீக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் இதனை மீறினால் அந்த சமூக வலைதள நிறுவனங்களுக்கு ரூ.283 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.