நெதர்லாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா - 309 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை..!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் 309 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா சாதனை படைத்துள்ளது.
உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் ஒன்றோடு ஒன்று மோதி வருகின்றன.
அந்த வகையில் நடப்பு தொடரின் 24-வது போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் நெதர்லாந்து அணி மோதி வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக க்ளென் மேக்ஸ்வெல் 106 ரன்களும், டேவிட் வார்னர் 104 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 71 ரன்களும் விளாசினர். நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி21 ஓவர்களில், 90 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 309 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையும் படியுங்கள் : லோகேஷ் கனகராஜை போருக்கு அழைத்த மன்சூர் அலி கான்..!
கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனை படைத்திருந்தது. இந்த சாதனை பட்டியலில், இன்றைய போட்டியின் மூலம் இரண்டாவது இடத்தை ஆஸ்திரேலியா பிடித்துள்ளது. மேலும், உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையையும் ஆஸ்திரேலியா படைத்துள்ளது.