AUS vs AFG: சதமடித்த இப்ராஹிம் ஜத்ரான் - ஆஸி. அணிக்கு 292 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 39-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் ஆஸ்திரேலிய அணிக்கு 292 ரன்கள் இலக்காக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 39-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஜத்ரான் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியில் 2 பவுண்டரிகளை விரட்டிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 21 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ரஹ்மத் ஷா தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரான் உடன் சிறப்பான ஜோடியை அமைத்தார். இந்த ஜோடியில் இப்ராஹிம் ஜத்ரான் 62 பந்துகளில் அரைசதம் விளாசினார். சுமார் 17 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்த இந்த ஜோடியில் ஒரு பவுண்டரியை விரட்டிய ரஹ்மத் ஷா 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி பேட்டிங் செய்ய வந்தார்.
ஆப்கானிஸ்தான் அணி 37.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்திருந்தபோது, நிதானமாக விளையாடி வந்த அந்த ஹஷ்மதுல்லா ஷாஹிதி மிட்செல் ஸ்டார்க் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து அஸ்மதுல்லா ஒமர்ஜாய் பேட்டிங் செய்ய வந்தார். 42.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 210 ரன் எடுத்திருந்தபோது, 18 பந்துகளில் 22 ரன் அடித்திருந்த அஸ்மதுல்லா ஒமர்ஜாய், ஆடம் ஜம்பாவின் பந்தில் கிளென் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன் குவித்தது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி 292 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது.