செல்லப்பிராணிகளுக்காக அறிமுகமான வாசனை திரவியம்! வெடித்த சர்ச்சை!
இத்தாலிய நிறுவனமான Dolce & Gabbana நாய்களுக்கான வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்தாலிய நிறுவனமான டால்ஸ் & கபனா நாய்களுக்காக ‘ஃபெஃப்’ என்ற வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நாய்களுக்காக ஆல்கஹால் இல்லாமல் தயாரிக்கப்பட்ட இந்த திரவியத்தின் விலை 99 யூரோக்கள், இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.9,000 ஆகும்.
இந்த திரவியம் பச்சை நிறப் கண்ணாடி பாட்டிலில் வருகிறது. பாட்டிலின் மேல் தங்க முலாம் பூசப்பட்ட நாய் பாத இலட்சினையும் பொதிக்கப்பட்டுள்ளது. நாய் உரிமையாளர்கள் வாசனை திரவியத்தை தங்கள் கைகளில் முதலில் அடித்து, அதனை நாயின் ரோமத்தில் தடவ வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் மூக்குப் பகுதியை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“நாய்கள் மக்களையும், விலங்குகளையும் தொடர்பு கொள்ள தனது மோப்பதிறனையும், அவர்களின் உடல் வாசனையையுமே நம்பியுள்ளன. ஆகையால் இந்த வாசனை திரவியங்கள் அவற்றிற்கு ஏற்றதாக அமையாது, இவை தவிர்க்கப்பட வேண்டும். மேலும் நாய்களும் இதை விரும்பாது” என விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புக்கான ராயல் சொசைட்டியின் மூத்த அதிகாரி ஆலிஸ் பாட்டர் கூறியுள்ளார்.