கோவிலில் உண்டியல் கொள்ளை முயற்சி - சிசிடிவி-யில் சிக்கிய 'பகல் கொள்ளையன்'!
தென்காசி மாவட்டம், சுரண்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோவில் உண்டியல் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், பட்டப்பகலில் அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது. இந்தக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று மதியம், சுரண்டையிலிருந்து சாம்பவர் வடகரை செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள அம்மன் கோவிலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கோவில் வளாகத்தில் யாரும் இல்லாத நேரத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருட முயற்சி செய்துள்ளார்.
ஆனால், கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இந்தச் சம்பவம் முழுவதுமாகப் பதிவாகியுள்ளது. உண்டியலை உடைக்க அந்த நபர் மேற்கொண்ட முயற்சிகளும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சிசிடிவி காட்சிகள் தெளிவாகக் காட்டுகின்றன.
கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், சுரண்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரின் உருவம் தெளிவாகப் பதிவாகியிருந்தது.
மேலும் அந்தக் காட்சிகளை வைத்து, காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர், ஏற்கெனவே இப்பகுதியில் நடந்த உண்டியல் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த நபர் கைது செய்யப்படுவார் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.