உயிரிழந்த அஜித்குமாரின் நண்பர் மீது தாக்குதல் - மருத்துவமனையில் திடீர் அனுமதி!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார், மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாரணையின் போது கடந்த ஜூன் 28ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய உயர்நீதிமன்ற மதுரை கிளை, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்து 8ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி, ஜூலை 2ம் தேதி முதல் திருப்புவனத்தில் காவல் நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தினார். ஜூலை 5ம் தேதி வரை பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை செய்தார். இந்த விசாரணையில் அஜித்குமாரின் தாயார் மாலதி, அவரது தம்பி நவீன்குமார் ஆகியோரும் ஆஜராகினர். மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் ஏடிஎஸ்பி சுகுமாறன் ஆகியோரும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
தொடர்ந்து நான்கு நாட்கள் நடந்த விசாரணைக்கு பின், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தனது விசாரணை அறிக்கையை இன்று சமர்ப்பிப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், அஜித்குமாரை போலீசார் அடித்து விசாரணை செய்தபோது, அவரது நண்பரும் ஆட்டோ டிரைவரான அருண் என்பவரையும் போலீசார் அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
போலீசார் தாக்கியதால் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகக் கூறி, மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அருண் திடீரென அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலில் ஏற்பட்டிருந்த வீக்கம், ரத்தக்கட்டு, மற்றும் விரல் வலிக்கு சிகிச்சை மற்றும் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு மருத்துவமனையில் உள் நோயாளியாக அருண் அனுமதிக்கப்பட்டு தற்பொழுது அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறும்போது, அருணுக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனை நடத்தி, பாதிப்பின் முழுமையான முடிவுகளை தெரிவிக்க மருத்துவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.