நடிகர் Allu Arjun வீடு மீது தாக்குதல் - தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடும் கண்டனம்!
நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
புஷ்பா 2 ரிலீஸுக்கு முன்தினம் இரவு, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் அப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது. அதனை பார்க்க கதாநாயகன் அல்லு அர்ஜுன் சென்றிருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் மரணம் அடைந்த நிலையில், அவருடைய 7 வயது மகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தெலங்கானா சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூட்ட நெரிசலுக்கு அல்லு அர்ஜூன்தான் காரணம் என்பது போல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் தெலங்கானாவில் இனி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவித்தார். இந்நிலையில் முதலமைச்சருக்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த அல்லு அர்ஜூன், தன்னுடைய புகழ் மற்றும் நற்பெயரை சீர்குலைக்கும் செயல்கள் நடைபெறுகின்றன என்று குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து நேற்று அல்லு அர்ஜுன் வீட்டின் முன் குவிந்த உஸ்மானியா பல்கலைக்கழக கூட்டு போராட்ட குழுவினர் திடீரென்று அங்கிருந்த பூந்தொட்டிகளை தூக்கிப்போட்டு உடைத்தும், அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அவர்கள் ரேவதி குடும்பத்திடம் அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அக்குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் முழக்கம் எழுப்பினர். இதனால் அங்கு திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கங்களை சேர்ந்த போராட்டக்காரர்கள் 8 பேரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள அவர் , "திரைப் பிரபலங்களின் வீடுகள் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் மாநில டி.ஜி.பி. மற்றும் நகர போலீஸ் கமிஷனர் கடுமையாக செயல்பட உத்தரவிடுகிறேன். இந்த விஷயத்தில் எந்த அலட்சியத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார்.