ATM பணப் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு : மே 1 முதல் அமல்!
வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இருந்து பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான சேவை கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதாவது தங்கள் சொந்த வங்கியின் ஏடிஎம்களில் இருந்து மாதத்திற்கு 5 முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். 5 முறைக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் பிடிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணத்தை ரூ.21-ல் இருந்து ரூ.23 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது ஆர்பிஐ. இந்த நடைமுறை மே.1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஒரு வங்கிக் கணக்கில் இருந்து, மற்றொரு வங்கியின் ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ.17-ல் இருந்து, ரூ.2 அதிகரிக்கப்பட்டு ரூ.19-ஆக நிர்ணயிக்க வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., ஒப்புதல் வழங்கி உள்ளது.
அதேப்போல, பிற வங்கி ஏடிஎம்களில் மெட்ரோ நகரமாக இருந்தால் மாதம் 3 முறை இலவச பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். மெட்ரோ நகரமல்லாத பிற பகுதிகளாக இருந்தால் மாதம் 5 முறை இலவச பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
பணம் எடுப்பதற்கு மட்டுமின்றி, நமது வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையை சரிபார்ப்பது மற்றும் மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது உள்ளிட்டவையும் கூட ஒரு பரிவர்த்தனையாகக் கணக்கில் கொள்ளப்படும். அந்த வகையில், பேலன்ஸ் சோதித்தல், மினி ஸ்டேட்மென்ட் எடுத்தல் ஆகியவற்றுக்கு, ரூ.1 அதிகரிக்கப்பட்டு, ரூ.6-ல் இருந்து ரூ.7-ஆக கட்டணம் உயரும் எனத் தெரிகிறது.