முழு கொள்ளளவை எட்டிய ஆத்தூர் காமராஜர் அணை!
ஆத்தூர் காமராஜர் அணை முழு கொள்ளளவு எட்டி மருகால் வழியாக 120 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி அடிவாரப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆத்தூர் காமராஜர் அணையில் தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியிலிருந்து கூளையாறு மற்றும் பெரிய ஆறு கால்வாய் மூலம் அணைக்கு நீர் வரத்து உள்ள நிலையில், கடந்த சில நாட்களாகத் தொடர் மழை காரணமாக, 23.6 அடி நீர் மட்ட உயரம் கொண்ட அணையில், நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதனை அடுத்து தற்போது அணைக்கு வரும் 120 கன அடி தண்ணீர் மறுகால் வாய்க்கால் வழியாக உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் ஆத்தூர் வட்டாட்சியர் கரையோர மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று இரவு வெளியேற்றப்பட்ட நீரில் சிக்கி பெரிய மருது என்ற வாலிபர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.