#AssemblyElections | ஆட்சி அமைக்கப் போவது யார்? | ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை!
ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் நாளை (அக். 8) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், செப்.25 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், அக்.1ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது. மொத்த வாக்காளா்கள் சுமாா் 88 லட்சம் போ் என்ற நிலையில், மூன்று கட்டங்களிலும் சோ்த்து 63. 88 சதவீத வாக்குகள் பதிவாகின. அங்கு, தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி அதிகப்படியான இடங்களில் வெற்றிபெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
அதேபோல், 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் நேற்று முன்தினம் (அக்.5) ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. சுமாா் 2 கோடி வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இம்முறை ஆட்சி மாற்றம் நிகழும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது. இந்த நிலையில் ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் நாளை (அக். 8) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதனையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.