அசாம் வெள்ளம் - உயிரிழப்பு எண்ணிக்கை 52ஆக உயர்வு... 21 லட்சம் பேர் பாதிப்பு!
தொடர் கனமழையால் அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை 56 பேர் வெள்ளத்தால் இறந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாயகரமான நிலை நீடித்து வருகிறது. இரண்டு மாநிலங்களிலும் வெள்ளப்பெருக்கினால் நேற்று, அதற்கு முன்தினம் என 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அசாமில் மட்டும் 46. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அசாமில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
29 மாவட்டங்களில் குறைந்தது 21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமின் தர்ராங், கச்சார், பார்பெட்டா மற்றும் கோலாகாட் போன்ற அசாமின் மாவட்டங்கள் இந்த வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கபட்டுள்ளன. இந்நிலையில் பஜாலி, பக்சா, பர்பேட்டா, பிஸ்வநாத், போங்கைகான், சிராங், தர்ராங், தேமாஜி, துப்ரி, கோல்பாரா, கோலாகாட், கம்ரூப் உள்ளிட்ட பகுதிகளுக்கு அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை எச்சரிக்கையும் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். தற்போது அசாம் முழுவதும் 698 நிவாரண முகாம்களில் 39,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 1000க்கும் மேற்பட்ட மக்கள், 635 விலங்குகள் வெள்ளப் பகுதிகளிலிருந்து படகுகள் மூலம் பத்திரமான வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்திய ராணுவம், மாநில அதிகாரிகள், நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இடைவிடாது மழை பெய்து வரும் நிலையில், அம்மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அசாம் மற்றும் மணிப்பூருக்கு அதிக மனிதவளம், படகுகள் மற்றும் உயிர்காக்கும் பொருட்களை வழங்குவதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.