இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி!
ஆண்களுக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பிகாா் மாநிலம், ராஜ்கிா் நகரில் இன்று தொடங்குகிறது.
மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி செப்டம்பர் 7-ந்தேதி வரை நடக்கிறது. மேலும் பங்கேற்கும் 8 அணிகளும் ’ஏ’ மற்றும் ’பி’ இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, சீனா, ஜப்பான், கஜகஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியனான தென் கொரியா, மலேசியா, வங்காளதேசம், சீன தைபே அணிகளும் இடம் பெற்றுள்ளன.ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.
இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி இன்று தனது தொடக்க ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது.
முன்னதாக இந்தியாவில் தங்கள் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக பாகிஸ்தானும், நிதிச் சிக்கல் காரணங்களால் ஓமனும் இந்த தொடரில் இருந்து வெளியேறியது. அதையடுத்து கஜகஸ்தான் மற்றும் வங்கேதச அணிகள் தொடரில் சோ்க்கப்பட்டுள்ளன.
இந்த தொடரில் வெற்றி பெரும் அணி 2026-ம் ஆண்டு ஆகஸ்டில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடியாக தகுதி பெறும். இதனால் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி வாய்ப்பை இழந்துவிட்ட இந்தியாவுக்கு, இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.