“கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் 2024” - ஜூன் 3-ம் தேதியன்று வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ‘கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் 2024’-ஐ திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஜூன் 3-ம் தேதி வெளியிட உள்ளார்
வரும் ஜூன் 3-ம் தேதி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 1-ம் தேதி, டெல்லியில் உள்ள அறிவாலயத்தில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கவுள்ளதாகவும், தொடர்ந்து சென்னையில் உள்ள அறிவாலயத்தில், கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும், புகழஞ்சலி செலுத்தும் கூட்டமும் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கம், கலைவாணர் அரங்கத்தில் கூட்டம் நடத்த வேண்டும் என்றால், தேர்தல் கமிஷன் அனுமதி பெற வேண்டும் என்பதால், அறிவாலயம் அல்லது நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடத்தலாமா என ஆலோசிக்கப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் விழாவுக்கு, 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் தலைவர்களை அழைக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அதற்கான அழைப்புகள் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜூன் 3-ம் தேதியன்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ‘கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் - 2024’ அன்று வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.