Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கைது செய்யப்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் - நேரில் சந்தித்த #DMK கூட்டணி கட்சித் தலைவர்கள்!

06:15 PM Oct 09, 2024 IST | Web Editor
Advertisement

சுங்குவார்சத்திரத்தில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள சாம்சங் தொழிலாளர்களை திருமாவளவன், வன்னியரசு, முத்தரசன், பாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு ஆகிய திமுக கூட்டணித் தலைவர்கள் நேரில் சந்தித்தனர்.

Advertisement

கடந்த ஒரு மாதமாக CITU தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் சாம்சங் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நேற்று (அக். 8) நள்ளிரவில் சென்ற போலீசார், 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். மேலும் போராட்ட திடல்களில் இருந்த பந்தல்களையும் அகற்றினர்.

இதனைத் தொடர்ந்து இன்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்த சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜனும் கைது செய்யப்பட்டார்.

https://twitter.com/karthicksmdu/status/1843986444010094848

தொழிலாளர்களை இன்று நேரில் சந்தித்து அரசியல் கட்சிகளின் தலைவர்களான செல்வப்பெருந்தகை, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவிக்கவிருந்த நிலையில் இந்த கைது நடைபெற்றது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டு சுங்குவார்சத்திரத்தில் அடைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை விசிக தலைவர் திருமாவளவன், விசிக பொதுச்செயலாளர் வன்னியரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன், “இந்தப் பிரச்சினை குறித்து தமிழக முதல்வரை இன்று அல்லது நாளை நேரில் சந்தித்து, இனிமேலும் இந்த பிரச்சினை நீடிக்காமல் ஒரு சுமுகமான முறையில் இப்போராட்டத்துக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த இருக்கிறோம். நிச்சயமாக முதல்வர் இதில் தலையிட்டு, சுமூகத்தீர்வு காண்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்தார்.

தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம், “அமைதியான முறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த ஊழியர்களை கைது செய்துள்ளார்கள். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். 16 ,17 ஆண்டுகள் இந்த நிறுவனம் செயல்பட்டுக் கொண்டு இருக்கையில் இதுவரை சங்கம் அமைக்க அனுமதிக்காததை கண்டிக்கிறோம். நாங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் தொழிலாளர்களை சுரண்டுவதை கண்டிக்கின்றோம்” என தெரிவித்தார்.

Tags :
cpicpmNews7TamilsamsungSamsung workersthirumavalavanVCK
Advertisement
Next Article