ராமேஸ்வரம் மீனவர்கள் கைது - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. இலங்கை கடற்படையானது, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்து அவர்களின் விலை உயர்ந்த படகுகளை பறிமுதல் செய்வது வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதது. மேலும் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. மற்றொரு சம்பவத்தில் தமிழக மீனவர்கள் ஒன்பது பேர் தங்கள் மோட்டார் பொருத்தப்பட்டநாட்டுப்படகுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர்,
”இன்று (29-07-2025) காலை இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் இயந்திரமயமாக்கப்பட்ட தங்களது மீன்பிடிப் படகுடன் சிறை பிடிக்கப்பட்டிருப்பதையும், மற்றொரு சம்பவத்தில் ஒன்பது மீனவர்கள் மோட்டார் பொருத்தப்பட்ட தங்களது நாட்டுப்படகுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியான இதுபோன்ற கைது நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெருத்த மனரீதியான மற்றும் பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது, 235 மீன்பிடிப் படகுகளும், 68 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர். நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கை அதிகாரிகளின் பிடியில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்”
என்று குறிப்பிட்டுள்ளார்.