#Tirunelveli | அரசு டாஸ்மாக் கடையில் கைவரிசை... - ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளை!
நெல்லை மேலப்பாளையம் அருகில் டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதியில், அரசு மதுபான கடை (டாஸ்மாக்) செயல்பட்டு வருகிறது. நேற்று (அக். 19) விற்பனையை முடித்துவிட்டு கடை ஊழியர்கள் வழக்கம்போல் இரவில் கடையை அடைத்து விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று கடையை திறக்க சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு 12 அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
உடனே தங்கள் அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். கல்லா பெட்டியில் பணம் எதுவும் வைக்காததால், பணம் எதுவும் கொள்ளை போகவில்லை என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் போலீசாரிடம் இருந்து தப்பிக்க, கடையில் இருந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட கருவிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக கடை மேற்பார்வையாளர் ஜான் லீகல் அளித்த புகாரில், மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த சாலையில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து, மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இதனிடையே போலீசாருக்கு கிடைத்த சிசிடிவி கேமரா காட்சிகளில், மர்ம நபர்கள் டாஸ்மாக் கடைக்கு வந்து முதலில் மின்சார இணைப்பை துண்டித்துள்ளனர். அதன் பின்னர் கடைக்குள் நுழைந்து சாவகாசமாக ஒரு மது பாட்டிலை உடைத்து குடித்து விட்டு, அங்கிருந்த மது பெட்டிகளை ஒரு ஆட்டோவில் ஏற்றி உள்ளனர்.
பின்னர் அங்கிருந்த லாக்கரை அறுக்க முயற்சி செய்தபோது, திறக்க முடியாததால் அருகே இருந்த பார் கதவை உடைத்து, அங்கிருந்து தண்ணீர் பாட்டில்களை எடுத்துக்கொண்டு அந்த கும்பல் தப்பிச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக லாக்கரில் இருந்த விற்பனை தொகை சுமார் 2 லட்சம் ரூபாய் தப்பியது என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில் கொள்ளை சம்பவத்தால் இன்று கடை தாமதமாக திறக்கப்பட்டது. இதனால் மதுபிரியர்கள் கடை முன்பு காத்திருந்தனர். நெல்லை மாநகரின் முக்கிய பகுதியான மேலப்பாளையத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.