கட்சிப் பொறுப்பிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம் - பகுஜன் சமாஜ் அறிவிப்பு!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார்.
மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, தன்னை பொற்கோடி ஆம்ஸ்ட்ராங் என்ற பெயரை பயன்படுத்தாமல், திருமதி ஆம்ஸ்ட்ராங் என்று பயன்படுத்துங்கள் என்று ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆம்ஸ்ட்ராங்கின் பெயரை நினைவூட்டவே இப்படியான வேண்டுகோளை அவர் விடுத்திருந்தார்.
கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அந்த கட்சியின் சேதிய ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்ஜீ கவுதம் மற்றும் முன்னாள் எம்.பி. ராஜாராம் ஆகியோர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருந்தனர். அப்போது அவர்களை, பொற்கொடி தலைமையிலான 500க்கும் மேற்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் ஒன்று திரண்டு நேரில் சந்தித்தனர்.
அப்போது, மாநில தலைவராக உள்ள ஆனந்தன், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் புகார் தெரிவித்தார். மேலும், பொற்கொடியை, தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள், மேலிடப் பிரதிநிதிகளிடம் மனு வழங்கி கோஷமிட்டிருந்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்ட அறிக்கையில், "பொற்கொடி இனி கட்சி பணிகளில் ஈடுபட மாட்டார். அவர் தன்னுடைய குடும்பத்தை மட்டுமே இனி கவனித்து கொள்வார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையில் மட்டுமேபொற்கொடி இனிமேல் கவனத்தை செலுத்துவார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.