ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை...!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலை மாதம் 5ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் தரப்பில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையினரின் விசாரணை சரியான கோணத்தில் செல்லவில்லை. மேலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு பின்னரும் அந்த ஆவணங்களை காவல்துறை இதுவரை சிபிஐ வசம் ஒப்படைக்கவில்லை. மாறாக உச்சநீதிமன்ற வழக்கை சுட்டிக்காட்டுகின்றனர். வழக்கை திசை திருப்பும் நோக்கிலேயே விசாரணை என்பது நடைபெற்றிருக்கிறது என வாதிட்டப்பட்டது.
தமிழ்நாடு அரசு தரப்பில், ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை என்பது நடைபெற்று குற்றபத்திரிகையின் தாக்கல் செய்யப்பட்ட ஆகிவிட்டது. இந்த நேரம் இந்த வழக்கை மீண்டும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட சிலர் ஜாமீன் பெற்று வருகின்றனர் எனவே இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையே வழக்கை தொடர்ந்து விசாரிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வாதங்கள் முன் வைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்று ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.