தீப திருநாள் அன்று திருவண்ணாமலை செல்ல இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான செய்தி!!
திருவண்ணாமலை தீப திருநாள் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பயணிகளின் வசதிக்காக தமிழநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற தீப திருநாள் (26/11/2023) அன்றும் மற்றும் 27/11/2023 அன்று பௌர்ணமி தினமானதாலும் தீபத்தை காணவும் மற்றும் கிரிவலம் செல்லவும் பல லட்சம் பொது மக்கள் திருவண்ணாமலைக்கு சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .
இதன் காரணமாக திருவண்ணாமலைக்கு தன் சொந்த வாகனங்களில் செல்லும் போது அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு சொகுசாக பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் வருகின்ற 25/11/2023 (சனி), 26/11/2023 (ஞாயிறு) மற்றும் 27/11/2023(திங்கள்) ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு ஐம்பது எண்ணிக்கையிலான குளிர் சாதனமுள்ள இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படவுள்ளது . இப்பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலை சென்று வர சிறப்பு பேருந்துகள் 24/11/2023 முதல் 26/11/2023 வரை இயக்கப்பட உள்ளது.
எனவே பக்தர்கள் www .tnstc.in மற்றும் tnstc mobile app-மூலம் முன்பதிவு செய்து தங்கள் பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .