பகல் நேரத்தில் வெளியே போறீங்களா? உஷாரா இருங்க மக்களே... இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மே 9ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : ஆயுஷ், ஜடேஜா போராட்டம் வீண்… சென்னையை வீழ்த்தி பெங்களூரு த்ரில் வெற்றி!
அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று (மே 4) தொடங்குகிறது. இந்த காலக்கட்டத்தில் வெயில் சுட்டரிக்கும் என்பதால் பொதுமக்கள் உச்சி வெயிலில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அதனுடன் கடல் காற்று குறைந்து அனல் காற்று வீசும். தற்போது வரை தமிழ்நாட்டில் வெயிலின் அளவு 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உள்ளது. அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் 42, 43 டிகிரி செல்சியசாக வெயிலின் அளவு உயரக் கூடும். இம்மாதம் 28-ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது. அதன்பிறகு, வெயிலின் அளவு படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.