“எல்லா திட்டங்களும் பெண்களுக்குத்தானா? என ஆண்கள் கேட்கும் அளவில் செயல்படுகிறோம்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், 1000 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாள அட்டைகளை பெண்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது, “மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த மாதத்தில் பிறந்ததில் நான் பெருமை அடைகிறேன். திராவிட இயக்கத்தை உருவாக்கிய பெரியார் வாழ்நாளெல்லாம் பெண் விடுதலைக்காக உழைத்தார். மனித வர்க்கத்தில் அடிமைத்துவம் ஒலிய வேண்டும் என்றால், பெண்ணை அடிமையாக்கும் எண்ணம் ஒழிந்தால்தான் முடியும் என்றார். அதனால்தான் திராவிட இயக்க ஆட்சி காலத்தில் பெண்களுக்கான உரிமை மீட்டுத் தரப்பட்டது. நீதிக்கட்சி ஆட்சியில்தான் பெண்களுக்கு வாக்குரிமை தரப்பட்டது.
பெரியார் வழித்தடத்தில் வந்த அண்ணா, சுயமரியாதை திருமணத்தை சட்டமாக நிறைவேற்றினார். பெரியார் போட்ட தீர்மானத்தை சட்டமாக்கி சொத்துரிமை தந்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. மேலும் பெண்களுக்கு பல முக்கிய திட்டங்களை கொண்டு வந்தார். திமுக ஆட்சியில் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செய்துள்ளோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், குழந்தை திருமணத்தை தடுத்து அவர்களை பாதுகாக்க பாலின வளமையங்கள், உள்ளாட்சியில் பெண்கள் அதிகாரமிக்கவர்களாக உயர்த்த 50 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கியுள்ளோம்.
வேலை செய்யும் பெண்கள் பாதுகாப்பாக தங்க நாம் தொடங்கின தோழி விடுதிகளுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் 72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 700 படுக்கை வசதி, மற்றும் 24 மணி நேர பாதுகாவலர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் புதிய தோழி விடுதிகள் அமைக்கவுள்ளோம். நான் எங்கே போனாலும் அங்கு அதிகமாக கூடியிருப்பது பெண்கள்தான். பெண்களின் உரிமையை எல்லா தளங்களில் உறுதி செய்கிற ஆட்சியாகவும் கோரிக்கைகளை வைக்காமலே நிறைவேற்றும் ஆட்சியாகவும் திமுக ஆட்சி இருக்கிறது என பாராட்டுகிறார்கள். அதை நினைத்து நினைத்து பூரிப்படைகிறேன்.
இங்கு வருவதற்கு முன்பு, 250 ஆட்டோக்களை பயனாளர்களுக்கு வழங்கிவிட்டுதான் வந்திருக்கிறேன். சென்னை மாநகரத்தில் பெண்கள் சுய வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக பிங்க் நிற ஆட்டோக்களை வழங்கி இருக்கிறோம். ஆட்டோவில் காவல்துறை உதவி எண் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 1000 மகளிர் சுய உதவிக்குழு சகோதிரிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கியுள்ளேன். அதன்மூலம் கிராம் மற்றும் நகர பேருந்துகளில் சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் பொருட்களை 25 கிலோ வரை கட்டணம் இன்றி எடுத்து செல்லலாம்.
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்தவர்கள் பயன்களை பெறலாம். கூட்டறவு வங்கிகளில் தரும் கடன்களை பெற முன்னுரிமை, கோஆப்டர்ஸ் பொருள்களுக்கு 5 விழுக்காடு கூடுதல் தள்ளுபடி, ஆவின் பொருட்களுக்கு குறைந்த விலை, இ சேவை மையங்களில் 10 விழுக்காடு சேவைக் கட்டணக் குறைவு ஆகியவற்றை சிறந்த முறையில் பயன்படுத்தி வளம் பெற வாழ்த்துகிறேன். இன்று தமிழ்நாடு முழுவதும் 34,073 சுய உதவிக் குழுக்களை 4,42,944 பெண்களுக்கு 3,190 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகளை வழங்கியுள்ளேன். இதை தொடங்கி வைக்கும் விதமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுகிற 3,584 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 46,592 பெண்களுக்கு 366 கோடியே 25 லட்சம் வங்கி கடன் இணைப்புகளை இந்த நிகழ்ச்சியில் வழங்கியுள்ளேன். தொடர்ந்து எல்லா மாவடங்களில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கும் வங்கி கடன் இணைப்புகளை வழங்கியுள்ளோம்.
மகளிர் உயர மாநிலம் உயரும் என்பதுதான் நம் ஆட்சியின் இலக்கணம் . எல்லா துறைகளில் பெண்கள்தான் உள்ளார்கள். இன்றைக்கு நாம் கொண்டாடும் மகளிர் தினமானது கல்வி, சம வாய்ப்பு சுதந்திரம், பெண்ணுரிமை, சுய மரியாதை போன்ற உரிமைகளை போராடி வென்றெடுத்த தினம். இந்த காட்சியை 50 ஆண்டுகளுக்கு முன்பு சுலபமாக பார்க்க முடியாது. 100 அண்டுகளுக்கு முன்பு பார்க்கவே முடியாது.
நான் முதலமைச்சராக அனைத்து மக்களுக்கும் வைக்கக்கூடிய கோரிக்கை ஆண் ஆதிக்க மனோபாவம் குறைய வேண்டும்.பெண்கள் நமக்காக தியாகம் செய்ய பிறக்கவில்லை. அவர்களும் நம்மை போன்ற எல்லா உரிமை கொண்ட சம மனிதர் என்ற எண்ணம் எலோருக்கும் தோன்ற வேண்டும். எல்லா இடங்களில் அவர்களுக்கு உரிய மரியாதையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும். அவர்களின் வளர்ச்சியை கேலி படுத்தி கொச்சைப்படுத்தக் கூடாது. அதுதான் உண்மையான சமுதாய சிந்தனை வளர்ச்சி. இதை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். திமுக ஆட்சியில் பெண்களுக்கான திட்டங்களை பார்த்து பார்த்து இப்போது ஆண்கள், என்னங்க எல்லா திட்டங்களும் பெண்களுக்குத்தானா? எங்களையும் கொஞ்சம் கவனியுங்கள் என்று கேட்கக்கூடிய அளவில் செயல்படுகிறோம். அது தொடரும்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.