சொர்க்கவாசல் வழியாக அரங்கநாதர் காட்சி - பக்தர்கள் மகிழ்ச்சி!
காரமடை அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, அரங்கநாத பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோவை மாவட்டம்,மேட்டுபாளையம் அருகில் உள்ள அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 31ஆம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கி, தினந்தோறும் அரங்கநாத பெருமாளுக்கு பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்று வந்தது. இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக அரங்கநாத பெருமாளுக்கு திருமஞ்சனம் உள்ளிட்டவைகளைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற நிலையில், நம்மாழ்வார் ,ராமானுஜர், திருநங்கை ஆழ்வார் ஆகியோருக்கு முதலில் சொர்க்கவாசல் வழியாக காட்சி அளித்தார்.
அதனைத்தொடர்ந்து உற்சவராக ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட ஷேச வாகனத்தில் வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க எழுந்தருளி, பரமபத வாசல் என்ற சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரங்கநாத பெருமாளை வழிபட்டனர்.