AI மூலமாக மறைந்த பாடகர்களின் குரல்களுக்கு உயிர் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!
1977 ஆம் ஆண்டு மறைந்த பாடகர் ஷாகுல் ஹமீது மற்றும் 2022 ஆம் ஆண்டு மறைந்த பாடகர் பம்பா பாக்யா ஆகியோரது குரல்களை செயற்கை நுண்ணறிவு மூலமாக "லால் சலாம்" படத்தின் "திமிறி எழுடா" பாடலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான பயன்படுத்தியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான பாடல்கள் வெளியிடப்பட்டன. அப்போது லால் சலாம் படத்துக்காக AI தொழில்நுட்பத்தில் பாடல் ஒன்றை பதிவு செய்துள்ள ஏஆர் ரஹ்மான், மறைந்த இரண்டு பாடகர்களுக்கும் உயிர் கொடுத்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். பாட்ஷா படத்துக்குப் பின்னர் மொய்தீன் பாய் என்ற முஸ்லிம் கேரக்டரில் நடித்துள்ளார் ரஜினி. இந்தப் படத்திலும் மும்பை ரிட்டர்ன் கேங்ஸ்டரில் ரஜினி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏஆர் ரஹ்மான், லைகா சுபாஸ்கரன், விஷ்ணு விஷால், விக்ராந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர், இதனையடுத்து லால் சலாம் படத்தின் பாடல்கள் வெளியாகின. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகிவிட்ட நிலையில், மீதமுள்ள 3 பாடல்களும் வெளிடப்பட்டன.
இதில் "திமிறி எழுடா" என்ற பாடலில் செம்ம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் ஏஆர் ரஹ்மான். ரோஜா முதல் இப்போது வரை இசையுலகில் மட்டும் இல்லாமல் டெக்னாலஜியிலும் ராஜநடை போட்டு வருகிறார் ஏஆர் ரஹ்மான். டெக்னிக்கலாக இசைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து தகவல்களையும் விரல் நுணியில் வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், லால் சலாம் படத்துக்காக இன்னும் கொஞ்சம் ஹைடெக்காகவே சென்றுள்ளார் ஏஆர் ரஹ்மான்.
அதன்படி லால் சலாம் படத்தின் திமிறி எழுடா பாடலில், மறைந்த பின்னணிப் பாடகர்கள் சாகுல் ஹமீது, பம்பா பாக்யா ஆகியோரை பாட வைத்துள்ளார். AI டெக்னாலஜியை பயன்படுத்தி உயிருடன் இல்லாத இரண்டு பாடகர்களையும் பாட வைத்துள்ளது திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பாடல் ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஏஆர் ரஹ்மானின் ஆரம்பகால பயணங்களில் அவருடன் பயணித்தவர் சாகுல் ஹமீது. ராசாத்தி, உசிலம்பட்டி பெண்குட்டி, குச்சி குச்சி ராக்கமா போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார் சாகுல் ஹமீது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தில் உயிரிழந்த சாகுல் ஹமீது தற்போது மீண்டும் AI உதவியுடன் ஏஆர் ரஹ்மான் இசையில் பாடியுள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.