Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெருங்கிவரும் தீபாவளி பண்டிகை: விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பட்டாசு கடைகளுக்கு அனுமதி!

07:24 AM Nov 01, 2023 IST | Web Editor
Advertisement

தற்காலிக பட்டாசுக் கடை வைப்பதற்கு, சட்ட விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

வரும் நவம்பா் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தற்காலிக பட்டாசுக் கடைகளை திறப்பதற்கு வியாபாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். பட்டாசுக் கடைகளில் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கு, பல்வேறு விதிமுறைகளை வழக்கம்போல தீயணைப்புத் துறை விதித்துள்ளது. தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்றால்தான் அந்தந்த மாநகர காவல் துறை அல்லது வருவாய்த் துறையிடமிருந்து பட்டாசுக் கடைக்குரிய உரிமம் பெற முடியும்.

பட்டாசு விற்பனையை ஒழுங்குபடுத்துவற்காக தீயணைப்புத் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு சுற்றறிக்கை அண்மையில் அனுப்பப்பட்டது. அதில் பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னரே தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமாக, வெடி பொருள் சட்டப்படி பட்டாசுக் கடை வைக்கும் இடம் கல் மற்றும் கான்கிரீட் கட்டடமாக இருக்க வேண்டும். கடையின் இரு புறங்களிலும் வழி கட்டாயம் இருக்க வேண்டும். கட்டடத்தில் மின் விளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பட்டாசுக் கடை விற்பனை உரிமம் கேட்பவர்கள் தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல் துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பட்டாசுக் கடைகளில் வேறு பொருள்கள் விற்பனை செய்யக் கூடாது.

தரைத் தளத்தில் மட்டும் பட்டாசுகளை வைத்திருக்க வேண்டும், படிக்கட்டுகள், மின் தூக்கி (லிப்ட்) ஆகியவற்றின் அருகே பட்டாசுகளை வைத்திருக்கக் கூடாது. இதேபோல அடுக்குமாடி குடியிருப்பு, திருமண மண்டபம், அரங்குகள் ஆகியவற்றில் பட்டாசுக் கடைகளை வைக்கக் கூடாது. ஒரு பட்டாசுக் கடைக்கும் மற்றொரு கடைக்கும் குறைந்தபட்சம் 3 கிலோமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

உதிரி பட்டாசுகளை கடைகளில் விற்பனை செய்யக் கூடாது. ‘இங்கு புகை பிடிக்கக்கூடாது’ என்ற எச்சரிக்கை விளம்பரப் பலகைகளை பட்டாசுக் கடை முன் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அலங்கார மின் விளக்குகளை தொங்க விடக் கூடாது. உரிமம் பெற்ற கட்டடத்தைத் தவிர வேறு இடங்களில் பட்டாசு இருப்பு வைத்திருக்கக் கூடாது; அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசு இருப்பு வைக்கக்கூடாது.

பட்டாசுக் கடையின் அருகே தீயணைப்புத் துறை வாகனம் வரும் அளவுக்கு வழி இருக்க வேண்டும். பட்டாசுக் கடையில் குறைந்தபட்சம் இரு தீயணைப்பு கருவிகள், இரு வாளிகளில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். கடை உரிமத்தை, தணிக்கையின் போது அலுவலர்களின் பார்வைக்கு தெரியும்படி வைத்திருக்க வேண்டும். இருப்பு, தணிக்கை பதிவேடு முறையாக பாராமரிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 30 விதிமுறைகளை பின்பற்றினால்தான் தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என பட்டாசு வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக பட்டாசுக் கடைகளில் திடீர் சோதனை நடத்தும்படி தீயணைப்புத் துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆய்வில் விதிமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தால், அந்த கடைக்குரிய உரிமத்தை ரத்து செய்யும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
cracker shopDiwalifestivalFire crackersFire DepartmentNews7Tamilnews7TamilUpdatesrules
Advertisement
Next Article