நாளை உதவி மருத்துவ அலுவலர்களுக்கான கலந்தாய்வு - மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்!
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட உதவி மருத்துவ அலுவலர்களுக்கான பொது கலாந்தாய்வு பிப்.3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
பொது சுகாதாரத்துறை இயக்குநரால் அறிவிக்கப்பட்ட 1,021 மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு செய்து முடிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்கள் நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது. டிசம்பர் 2023-ல் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட உதவி மருத்துவ அலுவலர்களுக்கான (Assistant Surgeon) பொது கலாந்தாய்வு பிப்ரவரி 03, 04 ஆகிய தேதிகளில் எழும்பூர் நலவாழ்வு மற்றும் குடும்ப நலப் பயிற்சி மையத்தில் காலை 9.30 மணி முதல் தொடங்கப்பட்டு நடத்தப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்கள் கலந்தாய்வில் பங்கெடுத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 06 அன்று தெரிவு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணை காலை 9 மணி முதல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனால் வழங்கப்படவுள்ளது.
நிர்வாக காரணங்கள் மற்றும் பொது சேவை வழங்குவதை உறுதிசெய்வதற்கென, சில மாவட்டங்களில் உள்ள அதிகமான காலியிடங்கள் மற்றும் சில இடங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள காலியிடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் காலியிடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள காலியிடங்கள் விரைவில் முன்மொழியப்பட்டு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் அடுத்த தேர்வின் மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. www.tndphpm.com என்ற இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 1,127 காலியிடங்களில் இருந்து மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் காலியிடங்களை தேர்வு செய்வார்கள். அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் இருப்பிடங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தொடர்பு விவரங்கள் www.tndphpm.com இல் பார்த்துக்கொள்ளலாம். இணையதளத்தில் காட்டப்படும் காலிப்பணியிடங்களை, ஆரம்ப சுகாதார நிலையத்தினைத் தேர்வு செய்வதற்கு முன், காலியிடங்களின் இருப்பிடங்களைச் சரிபார்க்க விண்ணப்பதாரர்கள் கோரப்பட்டுள்ளனர்.
அழைக்கப்படும் போது ஒரு குறிப்பிட்ட நபர் இல்லையெனில், அடுத்த நபர் அழைக்கப்படுவார். தனியரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வே இறுதியானது மற்றும் அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திற்கான நியமன ஆணைகள் வழங்கப்படும்.
நியமனத்தில் மாற்றம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அதுவே இறுதியானது. தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளத் தவறினாலோ, கலந்தாய்வின்போது எந்த குறிப்பிட்ட இடத்தையும் தேர்வு செய்யவில்லை என்றாலோ, மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய விண்ணப்பத்தில் உள்ளபடி அவர்கள் வசிக்கும் மாவட்டத்தின் அடிப்படையில் காலியிடங்களில் நியமன ஆணைகள் வழங்கப்படும்”
இவ்வாறு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.