குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஆஷிஷ் நெஹ்ரா விலகல்!... அடுத்த பயிற்சியாளராகிறாரா யுவராஜ் சிங்?
குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கை நியமிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், ஐபிஎல் 2025 தொடர் ஏலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்தாண்டு இறுதியில் ஏலம் நடைபெறலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், 10 அணிகளுக்குள் பெரிய மாற்றங்கள் நிகழ உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸை விட்டு வெளியேறி இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, டெல்லி கேபிடல்ஸ் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங்கின் பதவிக்காலமும் முடிவடைந்து, அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதையும் படியுங்கள் : டிஎன்பிஎல் கிரிக்கெட்: மதுரை அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது கோவை அணி!
இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் கிரிக்கெட் இயக்குனர் விக்ரம் சோலங்கி ஆகியோர் ஐபிஎல் 2025-க்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நெஹ்ரா மற்றும் சோலங்கி ஆகிய இருவரும் 2022ல் அந்த அணியில் இணைந்தனர். இதற்கிடையே, குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கை நியமிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.